Thursday, June 6, 2013

தமிழீழ தேசியக்கொடி


வீரத் தேசக் கொடிபறக்குது  விண்ணில்பாரடா - அது
வீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா!
தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அது
தேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா!
தீரர் நேசமைந்தர்  கொண்ட திண்மை கூறுதா - நின்று
தீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா?
ஊரைக் காத்த தெய்வமெண்ணி உள்ளம்சோருதா - இல்லை
உண்மைகண்டு ஒங்கிமீண்டும் உயர்பறக்குதா?

என்ன சொல்லத் துடிதுடிக்கு தென்றுகேளடா - அது
எத்தர்கூட்டம்  ஏனிங்கென்று எம்மைக் கேட்குதா?
மன்னன் ஆள வன்னிமண்ணில் நின்ற கொடியிதா - அங்கு
மற்றவர்க்கு என்னவேலை மண்ணில் என்குதா?
கன்னம் வைக்கும் கள்ளர் கூட்டம் கண்டு பொங்கியே -அது
கண்சிவந்து காற்றிலாடிக் காணும் தோற்றமா?
சின்னப் பெண்கள் மேனிதீண்டி சுட்டெரிக்கையில் - தானும்
சீறிமேனி செம்மை கொண்ட செய்கை கூறுதா?

தூக்கமின்றித் தொட்டுஓடும் தென்றல் போலவே - நீயும்
துள்ளியோடித் தூயமண்ணைக் காக்கச் சொல்லுதா?
ஆக்கமின்றி அன்னைபூமி இன்னல் காண்கையில் - வாழ்வில்
ஆனதென்ன மூலையோரம் அண்டிச் சோர்வதா?
தீக்குள் கையை வைத்தாகத் துள்ளி ஓடியே - உந்தன்
தேசம்காக்க திண்ணம் கொள்ளு திரள்வதொன்றுதான்
பூக்கும் மக்கள் புரட்சியொன்றே புதியபாதையில் - ஈழம்
போகும் பாதை காட்டும் என்று புன்னகைக்குதா?

தாய்க்குப் பிள்ளை நீயன்றோஇத் தாங்கும்பூமியில் இன்னும்
தஞ்சம் கேட்டு அகதியென்று தமிழிருக்கையில்
ஏய்க்கும்கூட்டம் ஏன் வளர்ச்சி கொள்ளுதென்குதா - அது
ஏன் நிலைத்து இன்னும்காணுதென்று துள்ளுதா
போய்மடைத் தனத்தைக் கொண்டு பிச்சைபோட்டதை - நீயும்
பசியெடுத்து உண்ட பாசம் பழியெடுக்குதா
நாய் பசிக்க நாலும்முண்ணும் நாமிருப்பதா - வேங்கை
நாள்முழுக்க ஊணொறுத்தும் புல்லை தின்னுமா

தேனினிக்கும் தேடியுண்ணு தின்னவும்கனி - யாரும்
தோலுரித்து வைப்பதில்லை நீயெடுத்துரி
நானிலத்தில் நீசுதந் திரத்தை நாடிடில் - உள்ள
நாள் சிறுத்துப்போகமுன்னர் நீதியின் வழி
போநினைந்து கொள் அடம்பன் பல்திரள்கொடி போல
பூமியில் திரள்பலத்தில் பொங்கி நீதியை
தானிணைந்து கேட்டலைந்து தட்டுகதவுகள் - உந்தன்
தலைமுறைக்கு விடுதலைக்கு வரும் ஒளிகதிர்.

கவிஞர்:கிரிஷாசன்